இந்தியாவின் ஆயிரம் ஆண்டு பழமையான கோயில்கள்

இந்திய நாடு முழுவதும் நிறுவப்பட்டிருக்கும் பழமையான ஆலயங்கள் இந்தியாவின் மிகச் சிறந்த சிற்பக் கலை , கட்டிடக்கலை மற்றும் பாணியை சிறப்பித்துக் கூறும் விதத்தில் அமைந்துள்ளன.

இந்தியாவின் ஆயிரம் ஆண்டு பழமையான கோயில்கள்

உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் நான்கு முக்கிய மதங்களான இந்து மதம், புத்த மதம் , ஜைன மதம் மற்றும் சீக்கிய மதம் ஆகிய மதங்களின் தாயகம் என்ற பெருமை, பாரம்பரியம் மிக்க இந்திய துணைக் கண்டத்திற்கு உண்டு. இதைப் போலவே, உலகின் வரலாற்று சிறப்புமிக்க பழம் பெரும் கோயில்கள் இந்திய நாட்டில் இருப்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. 

இந்த ஆயிரம் வருடங்கள் பழமையான கோயில்கள் , எளிமையான வாழ்க்கை வாழ்ந்த அந்த சகாப்தத்திற்கு உங்களை மீண்டும் இட்டுச் செல்கின்றன. கோயில்கள் கட்டப்பட்ட அந்த கட்டிடக்கலை ஆகட்டும், அவற்றோடு ஒருங்கிணைந்த சிற்பக்கலை ஆகட்டும், ஆலயங்களின் சுவர்களில் செதுக்கிய ஓவியங்கள் ஆகட்டும் , இவை அனைத்தும் அற்புத மகிமை பொருந்தியதாக இருக்கும்.

இந்தியாவில் இருக்கும் ஆயிரம் வருடங்களுக்குப் பழமையான கோயில்கள் :
1000 வருடங்கள் பழமையான கோயில்கள் இந்தியாவில் நிறைய இருந்தாலும் அவற்றுள் பத்து கோயில்கள் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றுள் சிலவற்றைப் பற்றி இப்போதும் நமக்கு பெரிதாகத் தெரிவதில்லை.

1. கைலாசநாதர் ஆலயம் - மஹாராஷ்டிரா 
இந்தியாவில் பாறையைக் குடைந்து செய்யப்பட்ட மிகபெரிய ஆலயங்களில் ஒன்று கைலாச ஆலயம். இந்தக் கோயில் 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று மஹாராஷ்டிரா வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆலயம் மகாராஷ்டிராவின் எல்லோரா குகையில் உள்ளது.   பல்லவ கட்டிடக்கலையின் சுவடுகளை சுட்டிக் காட்டும் விதமாக ஒரே பாறையில் இந்த ஆலயம் உருவானதாக கூறப்படுகிறது. 32 குகைக் கோயில்களில் 16வது கோயிலாக அறியபப்டுவது இந்த கைலாசநாதர் கோயில். மேலும் அனைத்து மடாலயங்களும் ஒருசேர எல்லோரா குகை என்று அழைக்கப்படுகிறது. கைலாச கோயிலைப் பற்றி தகவல் அறிந்து கொள்ள கல்வெட்டு கிடையாது. ஆனாலும் இந்த ஆலயம் ராஷ்டிரகுட்ட ஆட்சியில் நிறுவப்பட்டது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இந்த பழம்பெரும் ஆலயத்தின் மூலவர் கைலாசநாதர், அதாவது சிவபெருமான். இந்த ஆலயத்தின் உட்புற பிரகாரத்தில் மேலும் ஐந்து தனித்தனி சன்னிதிகள் உள்ளன. அவற்றுள் மூன்று சந்நிதிகள், கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய நதிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

2. ஆதி கும்பேஸ்வரர் ஆலயம் - கும்பகோணம் 
இந்த ஆயிரம் வருடம் பழமையான ஆலயம் சிவபெருமானை வழிபடக்கூடிய ஒரு ஆலயம் ஆகும். இந்த ஆலயம் தமிழ்நாட்டில் "கோயில்களின் நகரம்" என்று அழைக்கபப்டும் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் சோழர்கள் ஆட்சியின்போது நிறுவப்பட்டது. முதன்முதலில் 9ம் நூற்றாண்டில் இந்த ஆலயம் நிறுவப்படும்போது இதன் பரப்பளவு  30,181 சதுர அடியாகும். பின்னர் விஜயநகர ஆட்சியாளர்கள் இந்த ஆலயத்தை விரிவுபடுத்தினர். தென்னிந்தியாவில் கட்டாயம் காணவேண்டிய கோயில்களில் ஒன்று இந்த ஆதி கும்பேஸ்வரர் கோயில். 

சிவபெருமான் ஆதி கும்பேஸ்வரராக இங்கே காட்சி தருகிறார். லிங்க வடிவத்தில் ஆதி கும்பேஸ்வரர் வீற்றிருக்கிறார். பார்வதி தேவி மங்களாம்பிகை அம்மன் என்ற நாமத்தில் அழைக்கப்படுகிறார். நாயன்மார்களால் எழுதப்பட்ட தேவாரப் பாடல்களில் இந்த மூலவர் புகழைப் பறைசாற்றும் பாடல்களும் உண்டு. இந்தியாவில் உள்ள 274 பாடல் பெற்ற ஸ்தலங்களுள் இந்த ஆலயமும் ஒன்றாகும் .

3. கடற்கரைக் கோயில் - மகாபலிபுரம் 
வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ளதால் இந்த கோயிலை கடற்கரைக் கோயில் என்று அழைப்பார்கள். தென்னிந்தியாவின் பழமையான கட்டுமானக் கோயில்களுள் ஒன்றான இந்த கோயிலை பல்லவ மன்னன் நரசிம்ம வர்மன் II , கட்டினான். . இந்தக்  கோயில்  நிறுவப்பட்டது 7ம் நூற்றாண்டு . இந்த கடற்கரைக் கோயிலானது மூன்று கோயில்களை உள்ளடக்கியதாகும் . இதில் ஒன்று பெரியது மற்ற இரண்டும் சிறியது.

இந்த கடற்கரைக் கோயில் தொடக்க காலத்தில் நிறுவப்பட்ட ஏழு கோயில்களுள் ஒன்றாக அறியப்படுகிறது. 

ராஜா ஹிரண்யகசிபு பகவான் ஸ்ரீ விஷ்ணுவை வழிபட மறுத்துவிட்டார். ஆனால் அவர் மகன் பிரஹலாதன், விஷ்ணுவின் மீது அதீத பக்தி கொண்டு , தன் தந்தையின் அவநம்பிக்கையை விமர்சனம் செய்தான். இதனால் கோபம் கொண்ட ஹிரண்யகசிபு தன் மகன் என்றும் பாராமல் பிரஹலாதனை வெளியேற்றினார். பிறகு கோபம் குறைந்து அவனை மீண்டும் அரசவைக்குள் அனுமதித்தார். ஆனால் அவன் வந்தபின் மீண்டும் தந்தை மகனுக்கு இடையில் விஷ்ணு பகவான் மீது உள்ள பக்தி குறித்து விவாதம் தொடர்ந்தது. விஷ்ணு பகவான் எல்லா இடத்திலும் நிறைந்திருக்கிறார் , வீட்டின் சுவர்களில் கூட நாம் பகவானைக் காண முடியும் என்று பிரஹலாதன் கூறினான். இதனைக் கேட்டு கடுமையான கோபம் கொண்ட அரசன், தன்னுடைய அரசவையில் இருந்த தூணை ஓங்கி மிதித்தார். அந்த தூணில் இருந்து விஷ்ணு பகவான் நரசிம்ம அவதாரத்தில் வெளிப்பட்டு சிங்கத்தின் தலை மற்றும் மனிதரின் உடல் கொண்டு, ஹிரண்யகசிபுவைக் கொன்றார். அதன்பிறகு பிரஹலாதன் அரசனாக பதவி ஏற்றான். அவனுடைய பேரன் தான் பலி. பின்னாட்களில் பலி மகாபலிபுரத்தைக் கண்டுபிடித்தான்.

4. பாதாமி குடைவரைக் கோயில் - கர்நாடகா 
கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ளது பாதாமி . இதனை முன்னர் வாதாபி என்று அழைத்து வந்தனர். சாளுக்கியர்கள் ஆட்சி காலமான 540-757 வரை அவர்களின்  தலைநகராக பாதாமி இருந்து வந்தது. உலகின் மிகச் சிறந்த ராஜ்ஜியங்கள் தங்கள் ஆளுமையை வரலாற்றில் பதிவு செய்யும் நோக்கத்தில் மிகப்பெரிய கட்டிடங்களை உருவாக்கி இருந்ததால், அவர்களும் தங்கள் ஆட்சியில் இந்த குடைவரைக் கோயிலை நிறுவினர். இந்த கோயில்கள் 6ம் நூற்றாண்டு மற்றும் 7ம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டது. சாளுக்யா வம்சத்தின் முதல் ஆட்சியாளரான புலிகேசி I  இந்த கோயிலை கட்டத் தொடங்கினார்.  மனிதர்கள் வாழத் தொடங்கிய மிகப் பழமையான இடங்களில் பாதாமியும் ஒன்று.

பாதாமி நகரின் பெருமையை பறைசாற்றும் ஒரு இடம் இந்த குகைக் கோயில். பாதாமி கோயில்களில் பாறைகளைக் குடைந்து செய்யபட்ட கோயில்கள் பண்டைய காலத்து இந்து ஆலயங்களின் உதாரணமாகத்  திகழ்கின்றன. 6ம் நூற்றாண்டில் கைவினைஞர்கள் சாளுக்கியர் ஆட்சியில் இந்த கோயிலை வடிவமைத்துள்ளனர். வரலாறு மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு தக்க சான்றாக இந்த பாதாமி குடைவரைக் கோயில் இருக்கும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை.

5. முண்டேஸ்வரி கோயில் - பீகார்
பீகார் மாநிலத்தில் கைமூர் மாவட்டத்தில் கௌராவில், முண்டேஸ்வரி மலையில் அமைந்துள்ளது இந்த முண்டேஸ்வரி ஆலயம். இது இந்தியாவின் பழம்பெரும் ஆலயங்களில் ஒன்றாகும். இந்த ஆலயத்தில் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியை வழிபட பக்தர்கள் திரண்டு வருகின்றனர். தொல்பொருள் ஆராய்ச்சியில் இந்த ஆலயம் 2 ம் நூற்றாண்டை சேர்ந்தது என்று அறியப்படுகிறது. தற்போதும் செயல்பாட்டில் இருந்து வரும் ஒரு பழமையான கோயில் இதுவாகும்.


இந்தியாவின் தொல்பொருள் ஆராய்ச்சி கணக்கெடுப்பு இந்த கோயில் கிபி 108ம் ஆண்டு கட்டப்பட்டதாக கல்வெட்டு பதிவு இருப்பதைக் குறிப்பிடுகிறது. இருப்பினும் இந்த ஆலயம் கட்டப்பட்ட வருடம் குறித்து வேறு சில தகவல்களும் உள்ளன. குப்தர்கள் வம்ச ஆட்சிக்கு முன் கிபி 320ம் ஆண்டு இந்த கோயில் நிறுவப்பட்டதாக பீகார் ஆன்மீக அறக்கட்டளையின் தகவல்கள் குறிப்பிடுகின்றன. 1915ம் ஆண்டு முதல் இந்தியாவின் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் இந்த கோயிலை ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக போற்றி வருகிறது.
 
பாறையால் செய்யப்பட்ட இந்த ஆலயம், எண்கோணல் திட்டப்படி கட்டப்பட்டது. இது மிகவும் அரியதாகும்.  கோயில் கட்டிடக்கலையின் நகாரா பாணியின் ஒரு பழமையான முன்மாதிரியாக இந்த கோயில் விளங்குகிறது. நான்கு பக்கங்களிலும் கதவு மற்றும் ஜன்னல்கள் உள்ளன, சிற்பங்களை வரவேற்பதற்காக மீதமுள்ள சுவர்களின் சிறு வழித்தடங்கள் அமைந்துள்ளன. இந்த கோயிலின் கோபுரம் அழிந்துவிட்டது. இருப்பினும் கோயிலை செப்பனிடும்போது ஒரு மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலின் உட்புற சுவர்களில் பூந்தொட்டிகளும், இலை , தழைகள் ஆகியவற்றின் வடிவங்கள்  செதுக்கப்பட்டுள்ளன. கோயிலின் நுழைவு வாயிலின் கதவுகளில் துவாரபாலகர்கள், கங்கா, யமுனா மற்றும் பல்வேறு மூர்த்திகளின் வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கோயிலின் கருவறைக்குள் தேவி முண்டேஸ்வரி மற்றும் நான்கு முகம் கொண்ட சிவலிங்கம் ஆகியவை அமைந்துள்ளது. அசாதாரமான வடிவத்தில் இரண்டு கல் பாத்திரங்கள் அங்கு அமைந்துள்ளது. சிவலிங்கம் இந்த கருவறையில் மையத்தில் அமைந்திருந்தாலும், முதன்மைக் கடவுளாக தேவி முண்டேஸ்வரி பத்து கைகளுடன் , எருமை சவாரி செய்வதுபோல் மகிஷாசுரமர்த்தினி போல் காட்சி தருகிறாள். 

6. லட் கான் ஆலயம் - ஐஹோலே 

கர்நாடகாவில் உள்ள பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள ஐஹோலே என்னும் இடத்தில் உள்ளது  இந்த ஆலயம். இது இந்திய கோயில்களில் மிகவும் பழமை வாய்ந்தது. சாளுக்கியர்கள் ஆட்சி காலத்தில் 5 ம் நூற்றாண்டில் இந்த ஆலயம் நிறுவப்பட்டது. இந்திய கோயில்களின் வரலாற்றுப் பெருமையை நிரூபிக்கும் ஒரு சாட்சியாக இந்த கோயில் அமைந்துள்ளது. இன்றைய நாட்களில் இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் இருந்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு லட் கான் என்ற நபர் இந்த கோயிலைத்  தனது இருப்பிடமாகக் கருதி வசித்து வந்ததால் இப்பெயர் பெற்றது இந்த தலம்.

விஷ்ணு பகவானுக்காக கட்டப்பட்ட ஆலயம் தற்போது கர்ப்பகிருகத்தில் சிவலிங்கம் மற்றும் நந்தியுடன் அமைக்கப்பட்டுள்ளது. பஞ்சயத்தனா பாணியில் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது. கோயில்கள் கட்டுமானத்தில் மிகப் பழைய முறைக்கான ஒரு சோதனை முயற்சியாக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது. இந்த ஆலயம் செவ்வக அமைப்புடன் தொடங்கி சதுர வடிவத்தில் முடிவது இதன் சிறப்பம்சமாகும்.  ஒரு மர கட்டட வடிவமைப்பு அடிப்படையில், சதுர மற்றும் செவ்வக திட்டத்தில் செங்குத்தான கூரை உள்ளது, இது கல்லில் உள்ள மர பாணியின் தழுவலாகும்.

7. துர்கா தேவி ஆலயம் - ஐஹோலே 
கர்நாடகாவின் ஐஹோலே நகரத்தில் அமைந்த மற்றொரு அழகிய ஆலயம், துர்கா தேவி ஆலயம். இது சாளுக்கியர் ஆட்சியில் கட்டப்பட்ட மற்றொரு அற்புதமான ஆலயம் ஆகும். இதனை 7 ம் நூற்றாண்டு அல்லது 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தக் கோயில் சிவன் மற்றும் விஷ்ணு பகவானுக்காக அர்பணிக்கப்பட்ட கோயிலாகும். இந்து மதத்தில் துர்கா என்பது ஒரு புகழ்பெற்ற கடவுளின் பெயராக் இருந்தாலும் , இதில் துர்கா என்பது காவல் காப்பவர் என்ற பொருளைக் குறிக்கிறது. இது இடைக்கால இந்து மத கோயிலாக அறியப்படுகிறது. இந்த கோயில் கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் ஐஹோலே நகரத்தில் அமைந்துள்ளது.

இந்திய பாரம்பரிய கட்டிடக்கலையில் இந்த கோயிலின் வடிவத்தை கஜப்ரச்தம் என்று அழைகின்றனர். அதாவது யானையின் பின்புறத்தைப் போல் இதன் தோற்றம் அமைந்ததாகக் கூறப்படுகிறது. ஒப்பிட்டுப் பார்க்க முடியாத இந்த கோயிலின் வடிவம் புத்த மத வழிபாட்டு மண்டபத்தின் சாயலை பின்பற்றுகிறது என்று எண்ணப்பட்டது. ஆனால் பிற்காலத்தில் இது குறித்த ஆராய்ச்சிகள் , இத்தகைய ஒப்பிட முடியாத இந்திய கட்டிடக்கலை பான் - இந்தியா பாரம்பரியத்தைச் சேர்ந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது பௌத்த மத கட்டிடக்கலைக்கு முன்னரே பழக்கத்தில் இருந்து வந்த ஒரு வகையாகும்.

8. லிங்கராஜா ஆலயம் - புவனேஸ்வர் 
சிவபெருமானுக்காக கட்டப்பட்ட இந்த ஆலயம், ஓடிஷாவில் உள்ள புவனேஸ்வரில் உள்ள ஒரு மிகப் பழமையான ஆலயம் ஆகும். கலிங்க கட்டிடக்கலையின் சாட்சியாக விளங்கும் இந்த ஆலயம், 6ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் 11ம் நூற்றாண்டில் இந்தக் கோயில் விரிவுபடுத்தப்பட்டது. இந்தக் கோயிலின் மையக் கோபுரம் 180 அடி உயரம் கொண்டது. புவனேஸ்வரில் மிக உயர்ந்த கோயில் இந்த லிங்கராஜா கோயில்.
 
லிங்க ராஜா என்பது "லிங்கங்களின் அரசன்" என்ற பொருளைத் தருகிறது. சிவபெருமான் லிங்க வடிவில் மக்களுக்கு காட்சி அளிக்கிறார். ஆரம்பத்தில் கீர்த்திவாசன் என்ற பெயரில் வழிபடப்பட்டு பின்னர் ஹரிஹரன் என்ற பெயரில் அழைக்கப்படும் சிவபெருமான் திரிபுவநேஸ்வரா என்றும் அழைக்கப்படுகிறார். மூன்று உலகிற்கும் தலைவர் , அதாவது சொர்க்கம், பூலோகம் நரகம் ஆகிய மூன்று உலகிற்கும் சிவனே தலைவர் என்ற பொருளை இந்த பெயர் உணர்த்துகிறது. இங்கு எழுந்தருளி இருக்கும் தேவியின் பெயர் புவனேஸ்வரி.

கட்டிடக்கலையின் இடைக்கால பாரம்பரியத்தை அழகாக விளக்கும் ஒரு ஆலயமாக புவனேஸ்வரில் உள்ள இந்த ஆலயம் திகழ்கிறது. கட்டிடக்கலை மற்றும் வரலாற்றில் விருப்பம் கொண்டவர்கள் நிச்சயம் இந்த கோயிலை ஒரு முறை தரிசிக்க வேண்டும். சோமவம்சி வம்சத்தவர்களால் கட்டப்பட்ட இந்த ஆலயம் பின்னர், கங்கை ஆட்சியாளர்களால் விரிவுபடுத்தப்பட்டது. இந்த கோயிலில் மேலும் 50 சந்நிதிகள் உள்ளன. இந்த கோயில்களைச் சுற்றி ஒரு பெரிய மதில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

9. போக நந்தீஸ்வரா ஆலயம் - கர்நாடகா 

கர்நாடகாவின் நந்தி மலையில் இருக்கும் இந்த போக நந்தீஸ்வர ஆலயம், சிவபெருமானுக்குரிய ஒரு ஆலயம் ஆகும். பெங்களூருவில் இருந்து 60 கிமி தொலைவில் உள்ளது இந்த கோயில். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நினைவுச்சின்னமாக, இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனக் கட்டுப்பாட்டில் இந்த கோயில் உள்ளது. நந்தி மலை என்பது ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் ஆகும், ஆனால் இந்த போக நந்தீஸ்வரர் ஆலயம் குறித்து பலரும் அறிவதில்லை.

இந்த ஆலயம் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. கிட்டத்தட்ட 9ம்  நூற்றாண்டில் நந்தி மலையை ஆட்சி புரிந்த 5 வெவ்வேறு வம்சத்தினர் இந்த கோயிலை நிறுவியதாக கூறப்படுகிறது. இந்த கோயிலில் திராவிட கட்டிடக்கலை ஆதிக்கம் செலுத்துவதாக அறியப்படுகிறது. 

பானா ராணி ரத்னவள்ளி இந்த கோயிலை முதலில் நிறுவியதாகக் கூறப்படுகிறது. பின்னர், கங்கை வம்சத்தினர், சோழர்கள், பல்லவர்கள், ஹோய்சலர்கள், விஜயநகர அரசர்கள் என்று அடுத்தடுத்து இந்த கோயிலை ஒவ்வொரு அடுக்காக விரிவுபடுத்தினர். ஆரம்பத்தில் பாணர்கள் இந்த கோயிலை எழுப்பினார்கள், பின்னர், சோழ அரசர்கள், 11ம் நூற்றாண்டில் இந்த கோயிலுக்கு கோபுரம் அமைத்தனர், பிறகு ஹோய்சலா வம்சத்தினர் இந்த கோயிலுடன் ஒரு திருமண அரங்கத்தைக் கட்டினார்கள், பின்னர் இறுதியாக, விஜயநகர மன்னர்கள்,13ம் நூற்றாண்டில் இந்த கோயிலுக்கு வெளிப்புற சுவர் எழுப்பி இதர கட்டிடங்களை கட்டினார்கள். 


10. நந்தீஸ்வரர் ஆலயம் - மல்லேஸ்வரம் 
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்படும் வரை இந்த கோயில் 3000 ஆண்டுகளாக நிலத்திற்கு  அடியில் இருந்ததாக இந்த மர்மக் கோயில் பற்றி செய்திகள் வெளியாகிறது. மறுபுறம் இந்த கோயில் 7000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்ற கருத்தும் நிலவி வருகிறது. ஆனால் பெங்களூரு நகரத்தில் இந்த கோயில் மூன்று ஆடுகளுக்கு முன்பு தான் கண்டுபிடிக்கப்பட்டது. என்னதான் பல ஆண்டுகளாக மண்ணுக்கு அடியில் புதைந்து கிடந்தாலும், இந்த கோயிலில் ஒரு அருமையான அதிர்வு இருப்பதால், பலரும் இந்த கோயிலை நாடிச் செல்கின்றனர்.

அங்குள்ள ஒரு பூசாரி சொல்கிறார், மூன்று வருடம் முன்பு, ஒரு அரசியல்வாதி,இந்த இடத்தை விற்க முயற்சித்தார். ஆனால் மக்கள் இதனை மறுத்து, இந்த நிலத்தை முதலில் நோண்டி பார்த்து எதாவது உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும் என்று கூறினர். ஆச்சரியப்படும் விதமாக, மண்ணை நோண்டிப் பார்க்கையில் அடியில் ஒரு அழகிய கோயில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மேலும் ஆச்சர்யமூட்டும் செய்தி என்னவென்றால், இந்த கோயில் முழுவதும் அடர்த்தியான மண்ணால் மூடி பாதுகாப்பான மற்றும் சீரான நிலையில் இருந்தது.

பாறையில் செதுக்கிய அரசவை பழங்கால கல் தூண்களால் தாங்கி பிடிக்கப்பட்டு  இருந்தததால் இன்றளவும் பாதுகாப்பான நிலையில் இருந்தது. அரசவையின் ஒரு மூலையில் தங்கக் கண்கள் கொண்ட கருப்பு கல்லால் ஆன ஒரு நந்தி சிலை இருந்தது. அதன் வாயில் இருந்து சிவலிங்கத்தை நோக்கி நீர் ஓடை இருந்தது. இந்த குளத்திற்கு இட்டுச்செல்லும் படிகளும் அந்த குளத்தின் மையத்தில் ஒரு 15 அடி ஆழத்திற்கு நீர்ச்சுழியும் இருந்தது. 

பழங்காலம் முதல் இன்று வரை எதுவும் மாறவில்லை. இந்த நீரின் தொடக்கம் எது, இந்த நீர் எப்படி நந்தியின் வாயில் இருந்து சிவலிங்கத்திற்கு செல்கிறது என்பது யாரும் அறியமுடியவில்லை. மேலும் இந்த குளத்தில் நீர்ச்சுழி எவ்வாறு உண்டாகிறது என்பது பற்றியும் யாருக்கும் தெரியவில்லை. இவை அனைத்துமே இன்றும் மர்மமாக உள்ளது.