மனச்சோர்வு வகைகள்

நீங்கள் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா ? அதன் வகைகள் மற்றும் பைபோலார் கோளாறு ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

மனச்சோர்வு வகைகள்

மகிழ்வின்றிய கோளாறு('Dyshthymic Disorder) , பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு('Major Depressive Disorder) போன்றவை மனச்சோர்வு அல்லது மனத்தளர்ச்சி வகையில் முக்கியமாக கருதப்படுபவையாகும். மனச்சோர்வின்  முக்கிய வடிவமாக பார்க்கப்படுவது பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு ஆகும். இந்த மனச்சோர்வால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் கலவையான அறிகுறிகளை வெளிப்படுத்துவார் . மேலும் இந்த வகை பாதிப்பு ஒரு நபரின் வேலை, தூக்கம், படிப்பு, உணவு, சந்தோசம் ஆகியவற்றில்  பாதிப்பை உண்டாக்கும். இந்த வகை மனச்சோர்வு ஒரு மனிதனை இயல்பு நிலையில் செயல்பட விடுவதில்லை. 

மகிழ்வின்றிய கோளாறு என்னும் நிலை இரண்டு அல்லது மேற்பட்ட ஆண்டுகள் ஒரு நபரை பாதிக்கலாம். ஆனால், அதன் அறிகுறிகள் மிகக் கடுமையானவை அல்ல என்பதால், பாதிக்கப்பட்டவர் பலவீனமடைவதில்லை, ஆனால் வழக்கமான செயல்பாடுகளை மேற்கொள்வதில் கடினத்தன்மையை உணரலாம். சிலநேரங்களில். உடல் நிலையில் பாதிப்பு ஏற்படலாம். 

சில வகை மனச்சோர்வு எந்த ஒரு நபரையும் பாதிக்கலாம். இந்தப் பதிவில் மனச்சோர்வின் வடிவங்கள் பற்றி நாம் கூறவிருக்கிறோம். இதனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்

பின் மகப்பேறு இறுக்கம்:(Postpartum depression)

குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்கு பிறகு மனச்சோர்விற்கான  அறிகுறிகள் தலைதூக்கினால் அதனை பின் மகப்பேறு இறுக்கம் என்று கூறுவார்கள். பிரசவத்திற்கு பிறகு 10-15% பெண்கள் இந்த பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.

மனப்பித்து:

தீவிர மனத்தளர்ச்சி கோளாறுடன் சிலவகை மனநோய் ஒருங்கிணையும்போது, இந்த வகை மனத்தளர்ச்சியை மனப்பித்து என்று கூறுவர். உண்மையை உணராமல் இருப்பது, மாயத்தோற்றம், எந்த ஒரு விஷயத்தையும் பற்றி கருத்து இல்லாமல் இருப்பது போன்ற மனநிலையைக் கொண்ட ஒரு பாதிப்பு மனப்பித்து ஆகும்.  

சீசனல் அஃபக்ட்டிவ் டிஸார்டர்(Seasonal Affective Disorder (SAD)

இயற்கையாக சூரிய ஒளி குறைவாக இருக்கும் குளிர்காலத்தில் இந்த வகை மனக்கோளாறு உண்டாகிறது, வசந்த காலம் மற்றும் கோடைக்காலங்களில் இதன் தாக்கம் இயல்பாக குறைகிறது. லைட் தெரபி என்னும் ஒளி சிகிச்சை கொண்டு இந்த பாதிப்பை சரி செய்ய முடியும். ஆனால் இந்த பாதிப்பைக் கொண்டவர்களில் பாதி பேர்  மட்டுமே இந்த சிகிச்சையை மட்டும் பெற்று குணமாக முடியும். மனஅழுத்த எதிர்ப்பி மாத்திரைகள் மற்றும் சைக்கோ சிகிச்சை ஆகியவற்றை பயன்படுத்தி இவர்களுக்கு சிகிச்சை அளிக்கமுடியும். இதனுடன் ஒளி சிகிச்சையையம் சேர்த்து மேற்கொள்ளலாம்.

இருமுனையக் கோளாறு என்னும் பைபோலார் டிஸார்டர்:

“ 3 “ படத்தில் நடிகர் தனுஷ் இந்த வகை மனக்கோளாறால். பாதிக்கப்பட்டிருப்பார். இந்த வகையான மனச்சோர்வு வெறிபிடித்த மனச்சோர்வு நோய் என்றும் அழைக்கப்படுகிறது. பெரும் மனத் தளர்ச்சி, மகிழ்வின்றிய கோளாறு போன்றவை போல் இது ஒரு பொதுவான மனக்கோளாறு அல்ல. இருமுனைய கோளாறு பாதிப்பில் ஒரு நபரின் மனநிலை திடீரென்று மிக உயர்ந்த வெறித்தனமான நிலையில் இருந்து மிகக் குறைந்த மனச்சோர்வு நிலைக்கு  செல்ல நேரும்.