பூக்களே சற்று காத்திருங்கள் - நாங்கள் வருகிறோம் !
பூக்களோ அல்லது பூந்தோட்டமோ பொதுவாக பல நேர்மறை எண்ணங்களை நமது மனதில் விதைத்து நமது மனதை இலகுவாகச் செய்கின்றது.
நமது மூதாதையர் பொதுவாக பூக்களுக்கு தமது வாழ்க்கை முழுவதும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள். நமது வாழ்வில் அன்றாடம் பூக்கள் இருக்குமாறு பார்த்துக் கொண்டார்கள். "பொன் வைத்த இடத்தில் பூ வைக்கலாம்" என பழமொழி மூலம் பூவின் மேன்மையை பறை சாற்றினார்கள் .
திருமணம் முதல் இறப்பு வரை சகல நல்ல/கெட்ட விஷயங்களுக்கும் பூக்களை பிரதானம் ஆக்கினார்கள். வெற்றி வாகை சூடும் போதும் , புதியவை ஏதும் தொடங்கும் போதும் பூ மாலையை முதலில் போடுவார்கள்.
அவ்வளவு ஏன்? கோவிலுக்கு போகும் போது கூட இறைவனுக்கு பூக்களை மாலையாகவோ அல்லது உதிரியாகவோ எடுத்து சென்று இறைவனை அதன் மூலம் அலங்காரம் செய்து அழகு பார்ப்பார்கள்.
முன்பெல்லாம் கணவர்கள், தினம், தினம் தமது மனைவியருக்கு பூக்கள் வாங்கி கொடுப்பதை வழக்கமாக வைத்த்திருந்தார்கள். பொதுவாக காதலர்கள் தமது காதலிக்கு பூ கொடுத்து தான் காதலை சொல்லுவார்கள்.
வீட்டிலேயே இருக்கும் தமது மனைவியரையும், குழந்தைகளையும் கூட வெளியில் கூட்டிக் கொண்டு போவதாக இருந்தால் ஒரு கடற்கரைக்கோ அல்லது ஒரு பூங்காவிற்க்கோ தான் கூட்டிச் செல்வார்கள்.
பின்னாளில் நாம் பிளாஸ்டிக்கால் செய்யப் பட்ட பூக்கள், காகிதத்தால் செய்யப் பட்ட பூக்கள் போன்ற மாற்று வழிகளில் பூவை உருவாக்கி நமது முன்னோர்கள் ஏற்படுத்திய வழக்கங்களுக்கு மாற்று என்கிற பெயரில் ஒன்றிற்கும் உதவாத முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது வெளியில் செல்வது கூட ஒரு திரைப்படத்திற்க்கோ, அல்லது வேறு கேளிக்கை இடம் பெரும் இடத்திற்கோ செல்வதற்கு தான் நாம் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றோம் என்பது ஒரு வருந்த தக்க செய்தி.
சரி நாம் ஏன் செயற்கை பூக்களை தவிர்த்து தாவர பூக்களை உபயோகிக்க வேண்டும் அதற்கு ஏதாவது நன்மை இருக்கிறதா ? ஏதாவது அறிவியல் பூர்வமான ஆதாரம் உள்ளதா ? என்பதை இங்கே பார்ப்போம்.
நமது முன்னோர்கள் அறிவியலில் மிகச் சிறந்து விளங்கியவர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் எதையும் நாம் அறிவியல் பூர்வமாக அறிந்தால் மட்டுமே அவற்றை ஏற்கும் நிலையில் இருக்கிறோம்.
பொதுவாக உலகத்தில் நடக்கும் மிகப் பெரிய போர் என்பது, தினம் தினம் பிரச்சனைகளை அதிகமாக தமது தலையில் ஏற்றி வைத்திருக்கும் மனிதனுக்கும் அவனது மனதிற்கும் நடப்பதென்பதே. பிரச்சனைகளை உடனே தீர்த்து வைத்து இந்தப் போரை முடித்து வைப்பது என்பது முடியாத காரியம். அப்படி தீர்த்து வைக்க முடிந்தாலும் வேறொரு பிரச்சனை அவனை தொற்றிக் கொள்ளும். ஆதலால் போர் என்பது அவன் வாழ் நாளில் என்றும் முடிய போவது இல்லை.
சரி இதற்கும் பூவிற்கும் என்ன சம்மந்தம்?
இங்கு தான் நமது முன்னோர்களின் அறிவு நமக்கு புலப்படுகிறது. பொதுவாக ஒரு மலர்ந்த பூவைப் பார்க்கும் போது ஒரு இதமான மனநிலை நமக்கு உருவாகும். அஃது தற்செயலோ அல்லது நாம் செயற்கையாக ஏற்படுத்திக் கொள்ளும் எண்ணமோ அல்ல. அதனுள் ஒரு அறிவியல் இருக்கிறது.
பொதுவாக, பூச்செடியில் , மலர்ந்த பூக்களை நாம் பார்க்கும் போது நமது இரத்த ஓட்டத்தில் "செர்டோனின்" எனும் ஒரு உணர்வு கலந்து நமக்கு ஒரு இதமான உணர்வு கொடுக்கிறது. "செர்டோனின்" என்கிற இந்த உணர்வு நமது ஒட்டு மொத்த உணர்வுகளையும் அழகாக வடிவமைப்பதுடன், நாம் தூங்கும், உண்ணும், நாம் நம்மை வெளிப்படுத்தும் முறை ஆகியவற்றை அது சரி செய்கிறது.
இந்த "செர்டோனின்" என்பது பூக்களிடம் இருந்து வெளிவரும் கண்ணுக்கு தெரியாத நீராவியால் நம்மில் தூண்டப்படுகிறது. ஆதலால் தான் வாடிப் போன, அல்லது காய்ந்து போன மலர்களைக் கண்டால் நமக்கு "செர்டோனின்" உணர்வு வருவதில்லை.
இப்போது புரிகிறதா இந்த மிக நுண்ணிய விஷயத்தை கூட நமது முன்னோர்கள் கண்டறிந்து, நமது வாழ்க்கை முறைகளில் அவற்றை கலந்து நமக்கு கொடுத்திருக்கிறார்கள்.
இனியாவது கொஞ்சம் திரையரங்குகள் முன் நிற்பதையும், மால்களுக்கு செல்வத்தையும், தொலைக்காட்சியின் முன் மணிக் கணக்கில் உட்கார்ந்து இருப்பதையும் குறைத்துக் கொண்டு பூங்காவிற்கும், கடற்கரைக்கும் வாரம் ஒரு முறையாவது வரலாமே.