திருமணம் என்றால் என்ன?

தெய்வத்தின் சாட்சியாக இரு மனங்கள் இணைவதை நாம் திருமணம் என்று கூறுகிறோம்

திருமணம் என்றால் என்ன?

திருமணத்தில் நாம் பல சடங்குளை செய்து வருகிறோம். ஆனால் அதற்கான சரியான காரணங்கள் என்ன என்பதை அறிந்து செய்யும் போது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால் அதன்  விளக்கங்களை இப்போது காண்போம்.

வாழை மரம் கட்டுவது:
ஒரு வாழை மரம் நட்டால்  அதன் அருக சிறு சிறு வாழை மரங்கள்  தானாகவே வளரும் அதுபோல, திருமணத்திற்கு பிறகு அவர்கள் சந்ததிகள்  தழைத்து வளர வேண்டும் என்பது ஒரு காரணம். 

வாழை மரம் ஒரு முறை தான் குலை தள்ளும். அது போல வாழ்வில் ஒரு முறை தான் திருமணம் நடக்க வேண்டும் என்பதையும்  குறிக்கும் இந்த சடங்கு. 

அரசாணிக்கால்:
பழங்காலத்தில் ஒருவர் வீட்டில் திருமணம் நடைபெறும் போது அவர்கள் அந்த நாட்டு அரசருக்கும் அழைப்பு விடுப்பர். அந்த திருமணத்திற்கு அரசர் செல்ல இயலாத நிலையில் அவர் சார்பாக அவருடைய ஆணைக் கோலை  அனுப்பி வைப்பர்.அந்த திருமணத்திற்கு அதுவே சாட்சி. அரசர் ஆணைக்கோல் என்பது மருவி அரசாணிக்கால் என்று வழங்கப்படுகிறது. இன்றைய நாட்களில்  பொதுவாக கலியானமுருங்கை மரத்தின் கொம்பினை வைத்து அதற்கு பட்டு துணி சார்த்தி மஞ்சள் குங்குமம் சந்தனம்  வைத்து மேடையில் வைப்பது சடங்கு.

காப்பு கட்டல்:
மணமக்கள் செய்த பாவங்கள் போக்கப்பட்டு , அவர்களின் இந்த செயல் எந்த ஒரு தடங்கலும் இல்லாமல்  இனிமையாக முடிவதற்காக  இறைவனை வணங்கி கையில் மஞ்சள் கயிற்றை அணிவர்.

ஹோமம் வளர்த்தல்:
பல பேர் பங்கேற்கும் நிகழ்வில் உடல் நலம் பேணுவதற்காக ஹோமம் வளர்ப்பதை ஒரு சடங்காக செய்தனர். ஹோமத்தில் இடும் பொருட்களால் உடல்  ஆரோக்கியம் சீரடைகிறது. மேலும் அக்னியை சாட்சியாக வைத்து திருமணம் நடைபெற வேண்டும் என்பதையும் காட்டுகிறது.

கும்பம் வைத்தல் :
கும்பம் என்பது கடவுளின் மறு உருவம். கடவுளை முன் நிறுத்தி திருமணம் செய்ய வேண்டுமென்பதால் கும்பம் வைத்து அதற்கு பூஜை செய்த பின் திருமணம்  நடைபெறுகிறது. 

தாலி கட்டுதல்:
தாலம் என்றால் பனை . பழங்காலத்தில் பனை ஓலையை எடுத்து அதில் இன்னார் மகனும் இன்னார் மகளும் மணமுடிக்கின்றனர் என்று எழுதி அதை மஞ்சள் கயிற்றில் கோர்த்து பெண்ணின் கழுத்தில் ஆண்மகன் அணிவிப்பான். தால ஓலை  என்பது தாலி என்று அறியப்பட்டது. நாளடைவில் பனை ஓலைக்கு பதில்  தங்கத்தில் தாலி செய்ய தொடங்கினர். கணவனாகிய நான் என்றும் உனக்கு  காவல்  இருப்பேன் என்பதை அது குறிக்கிறது. கணவனே தனது கடவுள் ஆதலால் கணவனின் கால்களை தனது மார்பகத்தில் வைத்திருப்பதன் அறிகுறியாக கால் பாதங்கள் வடிவில் இருக்கும்  தாலியை மணமகள் அணிகிறாள்.

கெட்டி மேளம்:
தாலி காட்டும் போது மணமக்களுக்கு எந்த ஒரு அபசகுனம் பொருந்திய  சொற்களும் காதில் விழக்கூடாது என்பதற்காக நல்ல இசையுடன் அவர்கள் வாழக்கை தொடங்க வேண்டும் என்பதற்காக நாதஸ்வர  ஓசையுடன்  கூடிய மங்கள ஓசை ஒலிக்கிறது .

அட்சதை தூவுதல்:
அட்சதை என்பது மஞ்சள் தடவிய அரிசி மற்றும் மலர்களின்  கலவை. இதனை மணமக்கள் மீது தூவும் போது தீய சக்தி அவர்களை அண்டாமல் இருக்கும்.

கைவிளக்கு ஏந்தி நிற்பது:
விளக்கு ஒரு மங்கள  பொருள் . திருமணம் நடைபெறும் வேளையில்  நல்ல சகுனத்திற்காக விளக்கை கையில் வைத்திருப்பர் . பெரும்பாலும் விளக்கை கையில் வைத்திருப்பது மணமகனின் சகோதரியாக இருப்பது வழக்கம். 

மணமகளின் உச்சியில் திலகமிடுவது:
தாலி கட்டிய பின் கணவன் தன மனைவியின் உச்சந்தலையில் குங்குமம் வைப்பது வழக்கம். அன்று முதல் அவள் சுமங்கலி ஆகிறாள். உச்சந்தலையில் தான் மஹாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம்.

மணமகளின்  கையை மணமகன் பிடித்தல்:
வயது முதிர்ந்தாலும் நாம் ஒருவரை ஒருவர் பிரியக் கூடாது என்பதை உரைப்பதற்காக இந்த சடங்கு.

அம்மி மிதித்தல்:
அம்மியென்பது கல்லில் செய்யப்பட்ட ஒரு பொருளாகும். ஒரு ஆண் அவனுடைய எதிரிகளை  கல்லை போல் வலிமையாக நின்று எதிர்கொள்ள வேண்டும் என்றும். கல்லின் உறுதியுடன் வாழ்க்கையை சந்திக்க வேண்டும் என்பதயும் காட்டுகிறது.

மெட்டி அணிவித்தல்:
ஒரு பெண்ணுக்கு திருமணம் முடிந்து விட்டதை மற்ற ஆடவர்களுக்கு  உணர்த்துவதற்காக பெண்ணின்  கால் பெருவிரலுக்கு  அடுத்து இருக்கும் விரலில் மெட்டி அணிகிறார்கள்.  மெட்டி அணியும்  முறை பழங்காலத்தில்  ஆண்களுக்கு இருந்ததாகவும் கூறுவர். பெண்கள் தலை குனிந்து நடக்கும் போது ஆண்களின் மெட்டியை  பார்த்து அவன் மணமானவன்  என்பதை உணர்வதற்காக இருந்த சடங்கு காலப்போக்கில் மாற்றம் அடைந்ததாக கூறப்படுகிறது. 

மோதிரம் எடுத்தல்:
ஒரு பானையில் மஞ்சள்  நீரை ஊற்றி அதில் எதாவது ஒரு பொருளை போட்டு விட்டு அதனை மணமக்களை எடுக்கச் சொல்வர். இது மூன்றுமுறை நடை பெறும். ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவே இக்ச்டங்கு ஏற்பட்டது. 

அருந்ததி பார்த்தல்:
அக்கினி வலம் வரும் மூன்றாவது சுற்றில் மண்டபத்தின் வடக்கு திசையில் நட்சத்திரங்களுக்கு பூஜை செய்து அருந்ததியைக் காண்பிப்பார்.நிரந்தர கற்பு நட்சத்திரமாக நானும் இருப்பேன் என்று மணப்பெண் ஆணையிடுவதற்காக இந்த சடங்கு.

ஆரத்தி :
மணமக்களுக்கு திருஷ்டி கழிப்பதற்காக எடுக்கப்படுகிறது.

நிறை நாழி :
தினமும் குத்து விளக்கை வைத்து வழிபட்டு எல்லா நற்பேறுகளையும் பெற வேண்டும்  என்பது ஐதீகம். 

மறுவீடு :
ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் பிறந்த வீடும் புகுந்த வீடும் என்பதை ஒரு பெண்ணிற்கு உணர்த்துவதற்காக இந்த சடங்கு.

அடுத்து நாம் பங்கேற்கும் திருமணத்தில் இந்த சிறப்புகளை உணர்ந்து பங்கேற்போம்.