தாய்பால் குடிக்கும்போது குழந்தைகள் தூங்குவதற்கான காரணங்கள்

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலை விட சிறந்த ஊட்டச்சத்து மிக்க உணவு வேறெதுவும் இல்லை. இந்த காரணத்தினால் தான், மருத்துவர்கள் எல்லா தாய்மார்களும் தாய்பால் கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்.

தாய்பால் குடிக்கும்போது குழந்தைகள் தூங்குவதற்கான காரணங்கள்

தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு மட்டுமல்ல, தாய்க்கும் பிரசவத்திற்கு பின் விரைந்து தன் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க ஒரு சிறந்த வழியாகும். இருப்பினும் குழந்தை பிறந்து முதல் சில மாதங்களில் தாய்ப்பால் குடிக்கும்போதே சில குழந்தைகள் தூங்கி விடுகின்றனர். இதனால் தாய்மையை புதிதாக அனுபவிக்கும் தாய்மார்கள் அச்சம் கொள்கின்றனர். இது அப்படி பயம் கொள்ளும் அளவிற்கு பெரிய விஷயம் இல்லை என்றாலும், குழந்தையின் வளர்ச்சி குறித்த ஒரு பயம் அவர்களுக்கு உண்டாகிறது. அத்தகைய தாய்மார்களுக்கான ஒரு பதிவு தான் இது. குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும்போது தூங்குவதற்கான சில காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு உங்களுக்கான தீர்வையும் நாங்கள் கொடுத்துள்ளோம். இந்த பதிவை முழுவதும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பால் குடிப்பதில் குழந்தைக்கு அசௌகரியம் :
குழந்தை நன்றாக பால் குடிக்கவேண்டுமானால், அவர்கள் தாயின் மடியில் சரியான முறையில் கிடத்தப்பட வேண்டும். அப்படி அவர்கள் சரியான முறையில் படுக்காமல், மார்பின் முளையை சரியாக வாயால் பிடிக்காமல் இருந்தால் அவர்களால் பால் அருந்த முடியாது. இதனால் குழந்தை பால் அருந்தும்போதே தூங்கி விடலாம். தாய்பால் கொடுப்பதே ஒரு வலி நிறைந்த அனுபவமாக இருக்கும்போது குழந்தை சரியாக பால் குடிக்காமல் தூங்குவது தாய்மார்களுக்கு இன்னும் அதிக வேதனையைத் தரலாம். இதனைப் போக்க, தாய்பால் கொடுக்க தொடங்குவதற்கு முன், குழந்தையை சௌகரியமாக மடியில் வைத்துக் கொள்ளலாம். தாயின் மார்பு முளை குழந்தையின் வாயில் சரியாக படுவதற்கு ஏற்ற வகையில் குழந்தையை தூக்கிக் கொள்ளுங்கள். இதனால் குழந்தை எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் பால் குடிக்கத் தொடங்கும்.

இருப்பினும், அடுத்த சில நிமிடங்களில் குழந்தை தூங்கத் தொடங்கினால், உடனடியாக மார்பில் இருந்து குழந்தையின் வாயை விடுவித்து விட வேண்டாம். மெதுவாக உங்கள் விரலை குழந்தையின் வாயில் செலுத்துங்கள். இதனால் குழந்தைக்கு பால் உள்ளே செல்வது நிறுத்தப்படும். குழந்தையின் வாயை உடனடியாக மார்பில் இருந்து விடுவிப்பதால் உங்கள் மார்பு வலிக்கலாம். ஆனால் விரலை கொண்டு விடுவிப்பதால் இந்த வலி இல்லாமல் குழந்தையை விடுவிக்கலாம். மறுபடியும் குழந்தையை மடியில் சரியாக கிடத்தி பின் மறுபடி பால் குடிக்கச் செய்யலாம். 

வயிறு நிரம்பி இருக்கலாம் :
பல நேரங்களில் பால் குடிக்கும்போது குழந்தை தூங்குவதற்கான முக்கிய காரணம், அவர்களின் வயிறு நிரம்பி இருக்கலாம். வயிறு நிரம்பி திருப்தியாக  இருக்கும் போது தூக்கம் அவர்களுக்கு மிகவும் தேவை என்பதால் மறுபடியும் பால் குடிக்கும்போது அவர்கள் இயல்பாகவே தூங்கி விடலாம். குழந்தைக்கு அதிகமாக பால் கொடுத்துக் கொண்டே இருப்பது அவசியம் இல்லாத ஒன்று. குழந்தை அழும்போதெல்லாம் பால் கொடுக்க வேண்டாம். குழந்தை அழுவதற்கு வேறு சில காரணங்கள் இருக்கலாம். குழந்தையின் வயதுக்கேற்ற விதத்தில் எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை பால் புகட்ட வேண்டும் என்று குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று ஒரு அட்டவணை பெற்றுக் கொள்ளுங்கள். குழந்தையின் வயது, எடை போன்றவற்றைக் கொண்டு இந்த அளவை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதன்படி நடப்பதால் அளவுக்கு அதிகமாக குழந்தைக்கு பால் புகட்ட வேண்டியதில்லை.

பிறக்கும்போது குறைந்த எடை :
பிறக்கு போது சரியான எடையில் இருக்கும் குழந்தையை விட, எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள், பால் குடிக்கும் போது அடிக்கடி தூங்குவதாக அறியப்படுகிறது. மலம் அல்லது சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, (குறைவாக கழிப்பது) மிகவும் பலவீமாக இருப்பது, அல்லது வேறு ஆரோக்கிய குறைபாடுகள் தோன்றுவது போன்ற பிரச்சனைகள் வந்தால் மட்டுமே நீங்கள் கவலை படலாம். அதுவரை அவர்கள் பால் குடிக்கும்போது தூங்கினால் கவலைப் பட வேண்டாம். அப்படியும் நீங்கள் பயந்தால் , குழந்தை நல மருத்துவரிடம் சென்று ஆலோசனைக் கேளுங்கள், ஆனால் தொடர்ந்து குழந்தைக்கு தாய் பால் கொடுங்கள். சரியான பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தின் மூலமாக உங்கள் குழந்தை ஆரோக்கியமாக வளரும். கவலை வேண்டாம்.

மேலே கூறியவை எல்லாம் குழந்தைகள் அடிக்கடி பால் குடிக்கும் போது தூங்குவதற்கான பொதுவான காரணிகள். மேலும் சில காரணிகள் இதோ உங்களுக்காக..

தூக்கமின்மை காரணமாக அதிக சோர்வு
தாயின் அரவணைப்பு குழந்தைக்கு மிகவும் அவசியம். முதல் சில மாதங்களுக்கு தாய் குழந்தைக்கு மிக அருகிலேயே இருப்பது மிகவும் அவசியம். குழந்தை தாயின் அரவணைப்பில் இருக்கும் போது ஒரு கதகதப்பான உணர்வு தோன்றும். இதனால் குழந்தை சீராக பால் குடிக்கலாம் , அழகாக தூங்கலாம். தாய் குழந்தையை விட்டு விலகுவதால் நெருக்கமின்மை  காரணமாக குழந்தைக்கு பதட்டம் மற்றும் சோர்வு உண்டாகி தூங்காமல் இருக்கலாம். ஆகவே நீங்கள் பால் கொடுப்பதற்காக குழந்தையை தூக்கி மடியில் கிடத்தும்போது தாயின் அரவணைப்பு மற்றும்  தாயின் தொடுதல் குழந்தைக்கு ஆனந்தத்தைக் கொடுத்து தூக்கத்தையும் உண்டாக்கலாம்.'


தொற்று பாதிப்பு மற்றும் ஆரோக்கியத்தில் பிரச்சனை :

பிறந்த குழந்தை மற்றும் வளரும் குழந்தைக்கு ஆரோக்கியத்தில் சிக்கல் உண்டாவது மற்றும் தொற்று பாதிப்பு போன்றவை தவிர்க்க முடியாததாகும். தொற்று பாதிப்பால் குழந்தை சோர்வாக இருக்கும். இதன் விளைவாக பால் குடிக்கும்போது கூட அடிக்கடி தூங்கத் தொடங்கலாம். சரியான மருத்துவ உதவிகள் மூலம் இந்த நிலைமையை சரியாக்கி குழந்தையின் பாதிப்பை போக்கலாம்.

இருட்டான அறையில் பால் புகட்டுவதால், குழந்தைக்கு தூக்கம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. குழந்தைக்கு பால் புகட்டு அறை ஓரளவிற்கு வெளிச்சமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். வெளிச்சம்  அவர்கள் கண்களை உறுத்தாமல் இருக்க வேண்டும், அதே சமயம் இருட்டாகவும் இருக்கக் கூடாது. ஓரளவிற்கு வெளிச்சம் உள்ள அறையில் குழந்தைக்கு பால் புகட்டுங்கள். மேலும், குழந்தைக்கு பால் கொடுக்கும்போது அவர்களிடம் பேசிக் கொண்டே இருப்பதால் அவர்கள் விழித்திருக்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.

குழந்தைகள் முகவும் சிறியவர்கள். அவர்கள் ஒரு நாள் இருப்பதுபோல் எல்லா நாளிலும் இருக்க மாட்டார்கள். அதனால் குழந்தைக்கு பால் கொடுக்கும்போது தாய்மார்கள் விழிப்புணர்வோடு இருப்பதால் இந்த அனுபவத்தை நீங்களும் குழந்தையும் மகிழ்ச்சியாக உணரலாம்.